கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக, கொக்கிளாய் கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் 12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்க நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும் ,இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும் , வன ஜீவராசிகள் திணைக்களம் , வளவள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ,போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பததை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொக்கிளாய் கிராம மக்களால் (12) இன்று சனிக்கிழமை சற்று முன்னர் கொக்கிளாய் பாடசாலை முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கொக்கிளாய் கிராம மக்கள் முன்னெடுக்கும் குறித்த போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

