அ.தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புக்கு வரவேண்டிய, 2,500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு திரும்பிவிட்டது.
திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு மாவட்ட ம.தி.மு.க. கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று பேசியதாவது:-
தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிரணியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை, 75 சதவீதம் நிறைவேற்றி உள்ளது. தி.மு.க.வின், 1,560 அறிவிப்புகளில், 1,230 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப் பேற்ற உடன், 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
கொரோனா நிவாரண உதவியாக, ரேஷன் அட்டைக்கு, 4,000 ரூபாய் இரண்டு தவணையாக வழங்கினார். ஆனால், பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லையே? என்று எதிரணியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். நாம் பொங்கலுக்கு பணம் தருவோம் என்று சொல்லவே இல்லை.
ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மக்களை தேடி முதலமைச்சர் பெற்ற 2.5 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை, தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஆகியவை தி.மு.க. நிறைவேற்றிய வாக்குறுதிகள். ஆனால், அ.தி.மு.க. கொடுத்த சட்டமன்ற வாக்குறுதிகளான, ரேஷன் அட்டைக்கு மொபைல் போன், கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி, பெண்களுக்கு, 50 சதவீதம் இருசக்கர வாகனக் கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புக்கு வரவேண்டிய, 2,500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு திரும்பிவிட்டது.
ம.தி.மு.க.வினர், 90 சதவீதம் பேர் சமூக வலைத்தளம் பயன்படுத்துவது இல்லை. நமது கட்சியினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, வேட்பாளர்கள் வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பித்து, வாக்காளர்களை அதில் இணைத்து தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்.
இனி, சமூக வலைத்தளம் இல்லாமல் தேர்தல் பிரசாரம் இல்லை. எனவே, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்துங்கள். உங்களுக்கு, நமது ஐடி விங்க் உரிய உதவிகள் செய்வார்கள்.
ஹிஜாப் அணிவது அந்த மதத்தின் உரிமை. பெண் கல்வியை கெடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படு கிறது. நாளை பஞ்சாப் சென்று சீக்கியர்டர்பனை கழற்றச் சொல்வார்களா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியா. அண்ணாமலை சொல்வதை போல, நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவிகள் பயன்பெறவில்லை. 7.5 சத வீத இட ஒதுக்கீடு காரணமாகத்தான் பயன்பெற்றனர்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு உண்டா? தமிழகத்தில் மட்டும் தான் இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், 100 சதவீத இட ஒதுக்கீடு பெறும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சீட்டுகள் கிடைக்கவில்லை. எங்களுக்கும் அந்த வருத்தம் இருக்கிறது. தி.மு.க.வினருக்கும் இருக்கிறது. எல்லோருக்கும் சீட்டு வழங்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும். வாக்கு அரசியலை தாண்டி மக்களுக்காக செயல்படுகின்ற இயக்கம் தான் ம.தி.மு.க.
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனாலும், இந்த மத்திய அரசை நம்ப முடியாது. இவர்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழக அரசை மூன்றாண்டுகள் மட்டுமே அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
தி.மு.க. கூட்டணி, சட்டமன்றத் தேர்தலைவிட மாபெரும் வெற்றியை பெறும். வருகின்ற தேர்தலில், 80 சதவீதம் வெற்றி பெறும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி இல்லையென்று அவர்கள் சொன்னாலும், அவர்களை மக்கள் வேறு வேறாக நினைக்கவில்லை. எனவே, நடைபெறும் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

