மு.க.ஸ்டாலினால் நேரடியாக பிரசாரம் செய்ய முடியவில்லை- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

152 0

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் 100 சதவீதம் தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரம், டேல்கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்று பத்து மாத ஆட்சியில் சுய ரூபத்தை மக்கள் அறிந்து மிகவும் வருத்தப்படுகின்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.

தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது, அதை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. நிர்வாக திறமை இல்லை. வரலாற்று சாதனையாக, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா சொன்ன அனைத்து சாதனைகளையும் நிறைவேற்றிக் காட்டி னார்கள்.

பொங்கல் தொகுப்பு முழுவதும் தரமான பொருட்கள் வழங்காததால், விசாரணை கமி‌ஷனில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது தி.மு.க. அரசு. ஸ்டாலின் வரப்போறாரு விடியல் தரப்போறாரு என வீதிவீதியாக, கடைகடையாக, பேனர் வைத்தார்கள். விடியவும் இல்லை அவர் நல்லாட்சி தரவும் இல்லை.

இன்றைக்கு அவர் டிவியில் வந்து கொண்டிருக்கிறார். ஏன் என்றால் மக்களை நேரடியாக சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது தி.மு.க. அரசுக்கு.

தி.மு.க ஆட்சியில் எல்லாமே வெளிவே‌ஷம், நேரடியாக ஸ்டாலின் தெருவுக்கு வந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அவருக்கு மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்ற பத்தே மாதங்களில் ஒரு அரசு கெட்ட பெயர் வாங்கி இருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் 100 சதவீதம் தமிழகம் முழுவதும் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் எஸ். எஸ்.ஆர். சத்யா, நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.