பாலாற்று பாலம் சீரமைப்பு பணியால் கடும் நெரிசல்- செங்கல்பட்டில் 10 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

152 0

சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது.

செங்கல்பட்டை அடுத்த இருகுன்ற பள்ளி அருகே பாலாற்றில் 1955-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது.

இதன் பின்னர் 1986-ம் ஆண்டு அதன் அருகிலேயே மற்றொரு பாலம் அமைக்கப்பட்டது. பழைய பாலத்தின் மீது சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், புதிய பாலத்தில் திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும் வந்து செல்கின்றன.

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் அதிகளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பழைய பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும் பாலத்தில் உள்ள 12 இணைப்பு பகுதிகளும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து இந்த பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

 

வாகனங்கள்

 

அதன்படி நேற்று முதல் சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது.

சென்னை-திருச்சி, திருச்சி- சென்னை என இரு மார்க்கமாக வரும் வாகனங்களும் ஒரே பாலத்தில் சென்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை ஒரே பாலத்தில் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் புக்கத்துரை, சாலவாக்கம் வழியாக காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்து திம்மாவரம் பாலம் வழியாக சுமார் 15 கி.மீ. சுற்றி சென்னை நோக்கி திருப்பி விடப்பட்டது.

காலையில் இரு சக்கர வாகனங்களை நேரடியாக பாலத்தில் அனுமதிக்காததால் அவர்களும் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பாலம் சீரமைப்பு பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து புதிய பாலம் வழியாக இரு மார்க்கத்திலும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. சென்னை நோக்கி வரும் வாகனங்கள் 15 கி.மீ. சுற்றியும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாகவும் சென்று வருகின்றன.

வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் செங்கல்பட்டு பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை அதிக அளவிலான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் போக்குவரத்து நெரிசலில் பஸ், லாரி, கார்கள் சிக்கி தவித்தன.

சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் சென்னை நோக்கி வந்த வாகன ஓட்டி கள், பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.

பழைய பாலத்தில் சீரமைப்பு பணி 20 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அருகே உள்ள புதிய பாலத்திலும் சீரமைப்பு பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. அப்போது பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

இதன் காரணமாக வருகிற 40 நாட்களும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் என்று தெரிகிறது. இதனால் வரும் நாட்கள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படும்.