புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தொடர்ந்து 15 நாட்கள் முன்னோர்கள் தங்களுடன் வீட்டில் வாழ்வதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சீன மக்கள்.
புத்தாண்டு என்பது எந்த நாட்டினராக இருந்தாலும் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். கொண்டாடும் முறைகள் மாறுபட்டாலும் புத்தாண்டை கொண்டாடுவதில் யாரும் மாறுபடுவதில்லை. நாடு விட்டு நாடு வந்தாலும் தங்கள் கலாச்சாரத்தை, பண்டிகைகளை மறக்காமல் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
அது போல தான் மதுரையில் சீன புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். பாரம்பரியமாக சீன நாட்காட்டியின் முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலை முதல் 15-ம் நாள் வரை சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம்.
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 20 இடையே அமாவாசையை அடுத்து வரும் புதிய நிலவு தோன்றும் நேரங்களில் சீன புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 31-ந் தேதி மதுரையில் வசிக்கும் சீன மக்களால் சீன புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
மதுரை கோச்சடை மெயின்ரோட்டில் உள்ள நடராஜன் தெருவில் 3 தலைமுறையாக வாழ்ந்து வரும் பல் மருத்துவர் சென்பவ் தனது குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடினார்.
15 நாள் இந்த விழா தொடர்ந்து நடைபெறும் என்றும், இந்த வருடம் புலி ஆண்டாக வருகை தந்துள்ளது என்றும், 15 நாள் விழா முன்னோர்கள் வழிபடுதல் மேற்கொண்டு முன்னோர்களுக்கு பிடித்தமான லவ்தன் சென் தன், தன்சுவன், லவ் கோவ், சில்லி சிக்கன், இனிப்பு வகைகள் அனைத்தும் படைத்து முன்னோர்களை அழைத்து வழிபாடு நடத்துவதாகவும் புத்தாண்டு கொண்டாடுவோர் தெரிவித்தனர்.
மேலும் டம்மி சீன பணத்தையும் எரித்து அவர்கள் புத்தாண்டை கொண்டாடினர். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தொடர்ந்து 15 நாட்கள் முன்னோர்கள் தங்களுடன் வீட்டில் வாழ்வதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சீன மக்கள்.

