இலங்கை மின்சார சபையில் பிரச்சினைகள் மேலும் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளான..
மின்சார நெருக்கடியை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகிய கால தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளரரான ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு மற்றும் இலங்கை மின்சார சபை போன்ற ஒரு நிறுவனம் அவ்வாறான முறையில் இயங்க முடியாது எனவும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கான எரிபொருள் இருப்புக்கள் நாளை காலைக்குள் தீர்ந்துவிடும் எனவும், சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தை நாளைய தினம் இயங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள நீர் மின் நிலையங்கள் கூட பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றம் தவறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர், CEB பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் கூறிய போதிலும் நேற்று பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

