மன்னாரில் கடந்த 2 நாட்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – ரி.வினோதன்

253 0

மன்னாரில் கடந்த 2 நாட்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன்கிழமை (2) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த (திங்கட்கிழமை) 60 கொரோனா தொற்றாளர்களும்,நேற்று (செவ்வாய்க்கிழமை) 39 கொரோனா தொற்றாளர்கள் உள்ளடங்களாக கடந்த 2 தினங்களில் 99 கொரோனா தொற்றாளர்கள் அன்டிஜன் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சடுதியான எண்ணிக்கை அதிகரிப்பு மன்னார் மாவட்டத்தில் ஓமிக்ரோன் தொற்று பரவல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதினால் பொதுமக்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் சுகாதார வழி முறைகளை கடை  பிடிப்பதோடு, மூன்றாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக குறித்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

2 வது தடுப்பூசியை பெற்றுக் கொண்டு 3 மாதங்கள் கடந்த 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ,மூன்றாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 3423 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.36 கொரோனா தொற்று மரணங்கள் மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி 2 ஆம் திகதி கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. இவ்வருடம் தற்போது வரை 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.மொத்தமாக 12,500 மாணவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

தற்போது பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தற்போது வரை 24,300 இற்கும் மேற்பட்டவர்கள் குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.ஆக கூடுதலாக நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50.3 சதவீதமான 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சராசரியாக இதுவரை 34 சதவீதமான 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அதே வேளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி இடம் பெற உள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு வருகை தர இருக்கும் பக்தர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசியை பெற்று 2 வாரங்களாவது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

எனவே எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் மன்னாரில் அல்லது  தமது மாவட்டங்களில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.

வேறு மாவட்டங்களில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்கு வருகை தர உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் இருந்தால் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யுடன் தொடர்பு கொண்டால் இவர்களுக்கு விசேடமாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.