வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

276 0

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வரகாபொல

வரகாபொல பொலிஸ் பிரிவில் குருணாகல் – அம்பேபுஸ்ஸ வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்த இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ்சுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 வயது சிறுவனும் , 27 மற்றும் 63 வயதுகளையுடைய பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.

முச்சகரவண்டியில் பயணித்த நபர்கள் கெகிராவ பிரதேசத்திற்குச் சென்று மீண்டும் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனக்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அநுராதபுரம்

அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் அநுராதபுரம் – புத்தளம் வீதியில் சென்று கொண்டிருந்த காரொன்று முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்ஸினை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த முச்சகரவண்டியுடன் மோதியுள்ளது.

விபத்தில் முச்சகரவண்டியில் பயணித்த பிக்குணி அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றொரு நபர் படுகாயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளதோடு, அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிலியந்தல

பிலியந்தல பொலிஸ் பிரிவில் கொலமுன்ன – பிம்பாராம வீதியில் சீலரத்ன மாவத்தை சந்தியில் , சென்று கொண்டிருந்த லொறியொன்று வீதியில் சென்ற பாதசாரியொருவர் மீது மோதியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த பாதசாரி பியலந்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடைய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். பிலியந்தலபொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.