உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்வதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

246 0

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கடந்த 29-ந் தேதி பல்வேறு இடங்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், “உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இதுபோல ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் விதிகளை மீறி சட்டவிரோதமாக ஆளும் கட்சியினர் செயல்படுவதற்கு வசதியாக இந்த அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே இந்த அதிகாரி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரன் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பில் வக்கீல் நவீன் மூர்த்தி ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.