ஐரோப்பாவில் முடிவை நோக்கி செல்லும் கொரோனா பெருந்தொற்று- உலக சுகாதார அமைப்பு

174 0

பெருந்தொற்று உள்ளூர் அளவு தொற்றாக மாறி வருவதாக ஹான்ஸ் க்ளூக் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நெருங்கும் தருவாயில் இருப்பதாக ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹான்ஸ் க்ளூக் கூறியதாவது:
ஐரோப்பாவில் கொரோனா பெருந்தொற்று முடிவை நோக்கி செல்கிறது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 60% பேரை ஒமைக்ரான் தொற்றிவிடும். அதன்பின் ஒமைக்ரான் அலை குறைந்தவுடன் உலகளவில் சில காலம் அமைதி நிலவும்.
அதற்கு காரணம் தடுப்பூசி ஆற்றலாக இருக்கலாம் அல்லது மக்களுக்கு உருவான மந்தை நோய் தடுப்பாற்றலாக இருக்கலாம். அதன் பின்னர் கொரோனா தாக்கம் குறையும். இந்த ஆண்டு கடைசி வரை வேறு எந்த வகை தொற்று பாதிப்பும் இருக்காது.
ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக்
ஒரு பெருந்தொற்று உள்ளூர் அளவு தொற்று நிலைக்கு வருகிறது என்றால் அந்த நோயின் போக்கை நாம் கணித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே அர்த்தம்.
ஜனவரி 18-ம் தேதி கணக்கின்படி ஐரோப்பியாவில் பதிவான புதிய தொற்றுகளில் 15 சதவீத தொற்று ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டவை. தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அரசாங்கங்கள் தொற்றுப் பரவல் தடுப்பில் தீவிரம் காட்டுவது போல மருத்துவமனை தேவைகளை குறைப்பது, பள்ளிகள் செயல்பாடுகள் தடைபடுவதைக் சீர் செய்வது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, சீக்கிரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பது ஆகியனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு ஹான்ஸ் க்ளூக் கூறினார்.