சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாள்!

382 0

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாளானது 16.01.2022 அன்று சுக் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளிற்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அழித்துக் கொள்வோம், அடிபணியோம் என்று தம்மை ஆகுதியாக்கி வரலாறாகிய மாவீர வேங்கைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் காணிக்கை நிகழ்வுகளாக எழுச்சி வணக்கப்பாடல்கள், கவிவணக்கங்களுடன் நினைவுப்பகிர்வும் இடம்பெற்றன.

சுவிஸ் நாட்டில் தற்போது அதிகரித்துவரும் நோய்த்தொற்றுச் சூழ்நிலையிலும் அதற்குரிய பாதுகாப்பு நடைமுறை விதிமுறைகளைப் பேணி மக்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியமையானது உணர்வெழுச்சியாகவும், நீண்ட காலத்திற்கு பிறகு மீளவும் சுக் மாநிலத்தில் நடைபெற்ற வணக்கநிகழ்வில் சுக்மாநிலம் வாழ் மக்களும் கலந்து கொண்டிருந்தமையானது நம்பிக்கையைத் தருவதுமாக அமைந்திருந்தது. நிகழ்வின் இறுதியாக ‘நம்புங்கள் தமிழீழம்…’ பாடலைத் தொடர்ந்து உறுதியுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.