யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022

1675 0

கொறோனா நோய்த்தொற்றின் கரணியமாகக் கூட்டரசின் நோய்ப்பரவற் தடுப்புக் கட்டுப்பாடுகள் மனிதர்கள் இடையேயான இடைவெளியை அதிகரித்துத் தனிமைப்படுத்தி முடக்கநிலையை ஏற்படுத்திவரும் சூழலில், மனிதஇனம் தன்னையே தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஆரோக்கியமற்ற அவலநிலையானது, பெரும் மனச்சோர்வையும் இடைவெளிகளையும் ஏற்படுத்திவருகின்றது. மனிதர்கள் ஏறக்குறைய ஒருவித நுகர்வாளர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கற் பண்டிகையைத் தமிழினம் எதிர்கொண்டது.

தமிழர் தாயகங்களிற் தமிழர்திருநாட் கொண்டாட்டங்கள் இயல்பானபோதும், தமிழினம் ஏதிலியாகப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வேற்றுப் பண்பாட்டுச் சூழலில் தனது மொழியோடு பண்பாட்டு விழுமியங்களையும் பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கின்ற செயற்பாடுகளையும் செயற்படுத்தி வருவதன் ஒரு அங்கமாக இந்த ஆண்டிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களிற் கணிசமான தமிழாலயங்கள் காலநிலை, நோய்ப் பரவற்தடுப்புச் சட்டங்களை எதிர்கொண்டவாறு தமக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும், வளங்களையும் பயன்படுத்தி ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து தமிழாலயக் குடும்பங்களாகத் தமிழர் திருநாளைத் தமிழாலயங்கள் வெகுசிறப்பாகக் கொண்டாடியமை சிறப்பு மட்டுமன்றி, முயற்சி திருவினையாக்கும் என்பதற்குச் சான்றாகவும் இந்தத் தமிழாலயங்கள் விளங்குகின்றன.

நன்றி மறவாமையையும் விருந்தோம்பலையும் தன்னகத்தே கொண்ட தமிழர் திருநாளானது தமிழினத்தின் இயற்கையோடு இசைந்த வாழ்வியலையும், பல்லுயிரோம்பிப் பகிர்ந்துண்டு வாழும் பண்பியலையும் தழுவிநிற்கும் தனித்துவமான திருநாளாகும்.