கோவிட் தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் கோவிட் தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் விரைவில் ஜேர்மனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
முதலாவதாக, தனிமைப்படுத்தலுக்கும், சுய தனிமைப்படுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. தனிமைப்படுத்தல் என்பது, கோவிட் தொற்று இருந்த ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இருந்ததால், ஒருவேளை உங்களுக்கும் கோவிட் தொற்று உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என்பதால், உங்களிடமிருந்து மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
இது வெளிநாடுகளிலிருந்து வருவோரிடமிருந்து தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
தற்போது, கோவிட் அதி அபாயம் உள்ள நாடு ஒன்றிலிருந்து ஜேர்மனிக்கு வரும் தடுப்பூசி பெறாத பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும் என்ற விதி உள்ளது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு கோவிட் பரிசோதனை செய்து, அவர்களுக்கு கோவிட் இல்லை என்று தெரியவரும் பட்சத்தில், இந்த தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்துவிடும்.
மரபணு மாற்ற கோவிட் வைரஸ் அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் அனைவரும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். அவர்களது தனிமைப்படுத்தல் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படாது.
அதே நேரத்தில், சுய தனிமைப்படுத்தல் என்பது, உங்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுவிட்டால், உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு கோவிட் தொற்று பரவாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
ஒருவர் எப்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டியிருக்கும்?

