கூட்டமைப்பால் டொலர் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்க்க முடியும்

194 0

இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வை வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வை வழங்கும் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்க முடியும். எனினும் அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற விருப்பமில்லை.

இப்படியான வேலைத்திட்டம் தொடர்பாகவேனும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஒரு வருடகாலமாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பத்தை இதுவரை வழங்கவில்லை. எமக்கு சந்தர்ப்பத்தை வழங்கினால், நாட்டை கட்டியெழுப்பக் கூடிய யோசனைகளை எம்மால் முன்வைக்க முடியும்.

டொலர் பிரச்சினைக்கு ஒரு முறைமையை உருவாக்க முடியும். அரசாங்கம் தேர்தலுக்கு செல்லாது, இராணுவத்தினர் மற்றும் பிக்குமாரை பயன்படுத்தி அதிகாரத்தை தற்காத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றதே தவிர நாட்டை முன்னேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.