இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்தையும் மாற்றியிருக்கின்றோம்! – சுமந்திரன்

99 0

இந்தியப் பிரதமருக்குத் தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடித விடயத்தில் தமிழரசுக்கட்சி ஈடுபடத்தொடங்கியதிலிருந்து அதன் பொருள் அதனுடைய நோக்கம், அது எதனைக் கோருகின்றது அதன் தலையங்கம் அனைத்தையும் மாற்றியமைத்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஒரு ஜனநாயக விரோத செயல். அதை முழுமையாக எதிர்க்கின்றோம்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நான்கு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தல் நடாத்தப்பட வேண்டும். அவசர தேவைகளுக்காக அதனை நீடிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு இருந்தாலும் இப்போது செய்யப்பட்டிருக்கும் நீடிப்பு. எந்த வித காரணமும் இன்றி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க கட்சி தேர்தலுக்கு முகங்கொடுக்கத் திராணியில்லாமல் இதனை நீடித்திருக்கிறார்கள். ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி நீடிக்கப்பட முடியாது. அது முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம்.

அவர்களுக்கு மக்கள் மத்தியிலே இருந்த செல்வாக்கு இப்போது பூச்சியமாகிவிட்டது. நாடு பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. அதனாலே மின்சாரத்தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் போன்ற விளைவுகளைச் சந்திக்கின்றோம்.

நாட்டிலே பஞ்சம் ஏற்படும் என்று நாங்கள் முன்னரே சொல்லியிருந்தோம். அது தற்போது நிழத்தொடங்கியிருக்கிறது. எனவே நாட்டை மோசமான நிலைக்குக் கொண்டுவந்த இந்த அரசு பதவி விலகவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

இதேவேளை இந்த அரசை நீக்கிவிட்டு யார் பதவிக்கு வருவார்கள் என்ற விடயத்தையும் நாம் அவதானிக்க வேண்டும். அந்த விடயத்தில் கடந்தகால படிப்பினைகளையும் மனதில் வைத்து நாங்கள் செயற்படுவோம்.

எதிரணிகள் ஒன்று சேர்ந்து செயற்பட்டால் அது தொடர்பாக தக்க நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்போம். இந்தியப் பிரதமருக்கான கடிதத்தைக் கையளிப்பதற்கு அதனை கைச்சாத்திட்டவர்கள் செல்கின்றார்கள்.

என்னையும் வருமாறு அழைத்துள்ளார்கள். அந்தக்கடிதம் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த சொல்லி கோரிக்கை விடும் கடிதம் என்று கூறுவது தவறு.

அதிலே தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ன இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு இலங்கையிலே இடம்பெற்றிருக்கக் கூடிய முன்னெடுப்புக்கள் என்ன, இலங்கை அரசுகள் இந்தியாவிற்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் என்ன. என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

அதனடிப்படையில் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். அத்தோடு நிற்காமல் அதற்கும் அப்பால் சென்று ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நாங்கள் நிறைவேற்றுவோமென்று இலங்கை அரசு இந்தியா உட்பட உலகநாடுகளுக்கு தொடர்ச்சியாக வாக்குறுதி வழங்கியிருக்கின்றார்கள் அதைத்தான் இந்த கடிதம் கோருகின்றது.

முதலில் 13 ஆம் திருத்தத்தைக் கோரும் கடிதமாகவே அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த வேளையில் இலங்கை தழிரசுக்கட்சி அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கவில்லை. தமிழரசுக்கட்சி அதில் ஈடுபட ஆரம்பித்தபோது 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தமிழ்மக்களின் அபிலாசை அல்ல என்ற எங்களுடைய தெளிவான நிலைப்பாட்டைச் சொல்லியிருக்கின்றோம்.

அது ஒரு அர்த்தமற்ற அதிகார பகிர்வு முறை. மத்திய அரசு அந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. ஆகையால் ஒற்றையாட்சி அமைப்பிற்குள்ளே வழங்கப்படும் அதிகாரப் பகிர்வான 13வது திருத்தம் பயனற்றது. என்பது எமது நிலைப்பாடு.

ஆனால் அதைக்கூட இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் அதை நிறைவேற்றி அதற்கும் அப்பால் சென்று கொடுத்த அதிகாரங்களை மீளப்பெறமுடியாத ஒரு முறை வேண்டும் என்று இந்த கடிதம் கோருகின்றது.

எமது மக்கள் சர்வதேச சட்டத்தின்கீழே ஒரு மக்கள் எனும் ஸ்தானத்தைப் பெற்றவர்கள். எனவே சுயநிர்ணய உரிமை எங்களுக்கு உண்டு. அதனை உள்நாட்டிலே பிரயோகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அந்தவகையில் சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப்பகிர்வு முறைதான் உகந்தது என்பதை இந்த கடிதம் எடுத்துச் சொல்கின்றது.

தமிழரசுக்கட்சி அந்த கடிதத் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து அதன் பொருள் அதனுடைய நோக்கம் அது எதனைக்கோருகின்றது அதன் தலையங்கம் அனைத்தையும் மாற்றியமைத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.