ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெறுவதற்கு 58 நிபந்தனைகளை சிறீலங்காவுக்கு விதிக்கவில்லை!

337 0

eu_1-1சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு 58 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட 27 சர்வதேச சாசனங்களும் அங்கீகரிக்கப்பட்டு, அமுல்படுத்துவதே ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதற்கான ஒரே ஒரு தேவையாக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறீலங்கா மீளப்பெறவேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 58 நிபந்தனைகளையும் சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றவேண்டுமென கூட்டு எதிரணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

கூட்டு எதிரணியின் இக்கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் நியமங்கள் மற்றும் நல்லாட்சி ஆகியவை தொடர்பிலேயே சிறீலங்கா அரசாங்கம் சர்வதேச சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல், வர்த்தக மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சாசனங்களின் அமுலாக்கத்தில் மேலதிக முன்னேற்றமே அரசாங்கம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை பெறுவதற்கு ஏதுவாக அமையும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.