பொதுமக்கள் எளிதில் பெற ஆன்லைன் மூலம் மணல் விற்பனை – அமைச்சர் துரைமுருகன்

214 0

பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி எளிதாக ஆற்று மணல் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் மணல் விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொதுமக்கள், ஏழை எளியோர், புதிதாக வீடுகட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் கட்டிடமற்ற இதர பணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள், ஏழை- எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும்.
இவ்வசதியை தற்போது நடைமுறையில் உள்ள இணையதள வங்கி கணக்கு(நெட் பேங்கிங்), ஏ.டி.எம். அட்டை(டெபிட் கார்டு) மற்றும் யூ.பி.ஐ. ஆகிய ஆன்லைன் சேவைகள் வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.