விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

490 0

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சிசாலை, மியூசியம் போன்ற அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் இன்றுமுதல் மறு உத்தரவு வரும் வரை 3 நாட்கள் தொடர்ந்து படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் நான்கு வழிசாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சிலுவை நகரில் இருந்து கடற்கரை பகுதிக்கு செல்லும் சாலைகளிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்கு நுழைவு வாசல் அருகில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன. இதனால் வார இறுதி நாட்களில் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் உள்ள கடை வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை அருகில் உள்ள வாவத்துறை கடற்கரைப் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி மட்டும் களைகட்டியது.

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சிசாலை, மியூசியம் போன்ற அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசார் தடை விதித்தனர். ஏற்கனவே இந்த சுற்றுலா பகுதிகளுக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.

இதை தொடர்ந்து காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம் ஆகியவை மூடப்பட்டன. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து சென்றனர். இன்றும் ஏராளமானோர் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். ஆனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், திக்குறிச்சி பீச், மாத்தூர் தொட்டி பாலம், குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இன்று காலை சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலாத்தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.