மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி

1307 0

அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே,

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம்.

இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகிய நாம் எமது நிலைப்பாட்டினை அவர்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக எதிர்வரும் 26.02.2022 மனிதச்சங்கிலிப் போராட்ட வடிவிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை யேர்மன் நாடு தழுவிய ரீதியில் ஒரே நாளில் ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்பானவர்களே,

ஒரு தன்னாட்சி உரிமைக்காக போராடி வருகின்ற எமது மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்து வரும் சிங்கள இனவெறி அரசு இன்று எமது தமிழ்த்தேசிய அடையாளத்தினையே அழித்து விடுவதற்கான இறுதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் இன அடையாள அழிவினை எதிர்நோக்கியுள்ள பெரும் இக்கட்டான காலச்சூழலில் உணர்வோடு ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எமக்கு உள்ளது.

இப்பெரும் பொறுப்பினை உணர்ந்து கீழ்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் அனைவரும் அணிதிரளவேண்டும் என அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

1. தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்டது ஓர் இன அழிப்புத்தான் என்பதனை யேர்மனிய அரசு ஏற்றுக்கொள்வதோடு அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டும்.

2. ஈழத்தமிழர்களை ஒரு தேசிய இனம் என அங்கீகரிப்பதோடு தமிழர் தாயகமான தமிழீழத்தில் வாழும் அனைத்து மக்களுக்குமான தன்னாட்சி உரிமையினை (சுயநிர்ணய உரிமை) தார்மீக அடிப்படையில் யேர்மனிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் மனித உரிமை மீறல்களையும் யேர்மனிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதனை யேர்மனிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.