அமரர். திருமதி. ரதி. சிறிஸ்கந்தராசா அவர்களுக்கு இதய வணக்கம்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

324 0

அமரர். திருமதி.ரதி, சிறிஸ்கந்தராசா அவர்கள் பற்றிய திரு. கௌதமன் அவர்களின் பதிவு.

பெரும்பாசம் கொண்ட ரதி அண்ணிக்கு கண்ணீர் வணக்கம்.

ஜெர்மனி தேசத்தில் பெர்லின் மாநகரில் வசித்துக் கொண்டிருந்தாலும் ஈழத்தின் விடுதலையையே சுவாசமாக கொண்டு வாழ்ந்தவர்கள் ஸ்ரீகந்தராஜா அண்ணனும் ரதி அண்ணியும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஜெர்மனி சென்ற பொழுது அண்ணன் வீட்டில்தான் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அப்பொழுது என்னை ஒரு தாயைப்போல ரதி அண்ணி பேரன்போடு பார்த்துக்கொண்டார். பெர்லின் சுவர், ஹிட்லர் மாளிகை, மாவீரன் அலெக்ஸாண்டர் தனது படையுடன் ஜெர்மனிக்குள் நுழைந்த நுழைவு வாயில் என ஜெர்மனியின் எண்ணற்ற புராதன இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று ஆசை ஆசையோடு சுற்றி காட்டியவர்கள் அண்ணனும் அண்ணியும். புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் தமிழீழ விடுதலைக்காக போராடி இருக்கலாம். ஆனால் அண்ணனும் அண்ணியும் போராடிய நிகழ்வுகளையும் அவர்களின் மாபெரும் தியாகங்களையும் பாமினி அக்கா சொல்ல சொல்ல (அன்றே) கேட்டபோது கண்கள் கலங்கி நெக்குறுகிப்போனேன். பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணனுக்கு ஒரு நோய் தாக்கி கால்கள் இரண்டும் சரிவர இயங்க முடியாமல் போய்விட்டது. கூடவே தூக்கத்தை தொலைத்த கால் வலியும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் யுத்தகாலத்தில் இனத்திற்காக அவர் ஏறாத வீடில்லை, நடக்காத தெருவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக படாத அவமானம் இல்லை. இவரிருக்கும் சூழ்நிலையில் எவராக இருந்தாலும் மகிழுந்து ஓட்ட முடியாது. ஆனால் அண்ணன் தனக்கென்று தனியாக மகிழுந்தை வடிவமைத்து தனது கைகள் ஊடாகவே வாகனத்தை இயக்குவார். ஒரு நாள் அவரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இதற்கு மேலும் ஈழத்தின் விடுதலைக்கான போராட்டம் தொடங்கப்பட்டால் முன்னைப்போல உங்களால் இயங்க முடியுமா அண்ணா என்று நான் கேட்டபோது மெலிதான ஒரு புன்னகை இழையோட “தமிழினம் எம் தாய்நிலத்தின் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கினால் முன்னை விடவும் வேகமாக நான் ஓடுவேன். என் இனத்திற்கான பணியை என் மூச்சு உள்ளவரை நான் செய்வேன்” என்று மன உறுதியோடு அவர் பேசிக்கொண்டிருக்க அதனை அப்படியே ஆதரிக்கும் பொருட்டு “அதைவிட எங்களுக்கு வேறு என்ன வேலை கெளதமன்” என்று அண்ணியாரும் பேசியது இப்பொழுதும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிக்கிறது.

இப்படி ஒரு மாபெரும் தியாகம் செய்த இணையர்களில் ஒருவரை இயற்கை பிரித்துவிட்டதே என்று என்னும்போது ஒரு பக்கம் ரதி அண்ணியை நினைத்து துக்கம் தொண்டையினை அடைகிறது. இன்னொரு பக்கம் இனி தனியாளாக நிற்கப் போகும் ஸ்ரீ கந்தராஜா அண்ணனை பற்றி நினைக்க மனம் துடிதுடித்துப் போகிறது. இயற்கைக்கு ஏது இரக்க குணம்? ஆனாலும் என்ன இரண்டு தமிழன் இருக்கும் வரைக்கும் இந்த உலகத்தில் எவன் ஒருவனும் அனாதை இல்லை. எம் அண்ணனுக்கு நான் இருக்கிறேன், நாம் இருக்கிறோம். எனது தாய்க்கு சமமான ரதி அண்ணிக்கு மீண்டும் எனது கண்ணீரை நன்றியோடு உரித்தாக்கிக் கொள்கிறேன்.

– வ. கௌதமன்