மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

220 0

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரத்துறைக்கு இம்முறை மலையகத்தில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பமொன்றுக்கு ஒரு கிலோ 80 ரூபா படி 15 கிலோ கோதுமை மாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள இந்த நிவாரணத்தை நாம் வரவேற்கின்றோம். மக்களுக்கு உரிய வகையில் பங்கீடு இடம்பெறும். அதற்காக ஊழியர்களை நியமிக்கவுள்ளோம். நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் தேவைப்படுகின்றது.

அதேபோல இடம்பெற்றுள்ள சிற்சில தவறுகளுக்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும். அதனைவிடுத்து தனிநபர்மீது பழியைச் சுமத்த முற்படுவது தவறு. மக்களுக்குச் சேவை செய்யவே பதவி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மக்களுக்கு அதனை வழங்குவதற்கே முற்பட வேண்டும். மாறாகக் குறைகூறுவதற்காக மட்டும் மக்கள் எம்மை நாடாளுமன்றம் அனுப்பவில்லை. கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அதுவரை பொறுமையாக இருப்போம். கூட்டு ஒப்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தொழிலாளர்களின் வலி புரியாதவர்களே அரசியல் நோக்கிக் கூட்டு ஒப்பந்தத்தை விமர்சிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அரச ஊழியர்கள் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அல்ல. தனியார் நிறுவனங்களின்கீழ் தான் அவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, கம்பனிகள்தான் நிவாரணம் வழங்க வேண்டும்.

தொழிலாளர்களைச் சுரண்டும் நிறுவனங்கள் அதனை வழங்குமா என தெரியாது. அதேவேளை, வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கடந்தாண்டு கவனம் செலுத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறைகள் தொடர்பில் இவ்வருடம் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

4 ஆயிரம் இந்திய வீடுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தைச் செயற்படுத்துவோம்.

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதே மறைந்த எமது தலைவரின் நிலைப்பாடாக உள்ளது. அந்தவகையில் தமிழ் பேசும் கட்சிகளின் முயற்சிக்கு ஆதரவு வழங்கப்படும். கூட்டத்தில் பங்கேற்றால்தான் ஆதரவு என்றில்லை. ” என தெரிவித்துள்ளார்.