எரிவாயு இரசாயன கலவை மாற்றத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் – முஜிபுர்

137 0

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பு சம்பவங்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதால்தான் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக இதுவரை 7பேர் மரணித்துள்ளனர். பல பொருட்சேதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு இருந்தும் அரசாங்கம் இதனுடன் சம்பந்தப்பட்ட யாரையும் கைதுசெய்யவும் இல்லை. அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

இந்த சம்பவத்துக்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதால்தான் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றது. என்றாலும் அரசாங்கம் தற்போது அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து வருகின்றது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அரசாங்கத்தின் நிறுவனமாகும். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் அமைச்சுக்கு கீழே அது இருக்கின்றது. அதன் தற்போதைய தலைவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவராகும். இதற்கு முன்னர் இருந்த தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் நியமிக்கப்பட்டவர்.

அவர் தலைவர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டரின் இரசாயன கலவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அவரே வெளிப்படுத்தி இருந்தார். அத்துடன் அந்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக தற்போதைய தலைவர் வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் இவை தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நடவடிக்கையே தற்போது சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகும். அதனால் இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் மீது மாத்திரம் பழியை சுமத்தி அரசாங்கத்துக்கு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.