முல்லைத்தீவில் வேட்டைக்காரரின் வெடிபொருளில் சிக்கி காயமடைந்த யானைக்குட்டி

463 0

முல்லைத்தீவு குமுளமுனை பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் ஹூக்கா பட்டாசில் சிக்கி ஆபத்தான நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வடமாகாண வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுமார் 4 அடி உயரமுள்ளதும் மூன்றரை வயதுடையதுமான யானைக்குட்டி தொடர்பில் வடமாகாண வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் முல்லைத்தீவு வனஜீவராசிகள் உத்தியோகத்தர் அலுவலகத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வடமாகாண வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர் பா.கிரிதரன் தலைமையிலான வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் இன்று காலை யானைக்குட்டியை கண்டுபிடித்து ஸ்தலத்திற்குச் சென்று சிகிச்சை அளித்தனர்.

வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில், உள்ளூர் வேட்டைக்காரர் ஒருவர் வெடி பொருளில் சிக்கி யானைக்குட்டி பலத்த காயம் அடைந்ததாகவும், அதன் வாயில் பலத்த சேதம் ஏற்பட்டு, சாப்பிட முடியாமல் போனதாகவும் தெரிவித்தனர்.

ஹூக்கா பட்டாஸ் வெடிப்புக்கு காரணமானவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் முல்லைத்தீவு வனஜீவராசிகள் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த காட்டு யானைக்குட்டிக்கு எதிர்வரும் சில தினங்களுக்குள் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.