தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்- தர்மபுரம் ஆதீனம்

285 0

தஞ்சையை சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது.

தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கம் தொடர்பாக மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க தலங்கள் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதுகுறித்து சிலை தடுப்பு போலீசார் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தங்களிடம் போலீசார் விசாரித்து உறுதி செய்து கொண்டனர்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்.

சிலைய மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி ஜெய்ந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு (சிலைகடத்தல் தடுப்பு பிரிவு) பொன்னி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.