சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது!

276 0

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க தேவையான மசகு எண்ணெய் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாட்டிற்கு தேவையான மசகு எண்ணெய் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு முன்னரும் மூடப்பட்டிருந்தது.

சுமார் 36 நாட்கள் மூடப்பட்டிருந்த சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

அத்துடன், நாட்டுக்குத் தேவையான மண்ணெண்ணெய், விமான எரிபொருள் என்பன சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தினால் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

எரிவாயு நெருக்கடி காரணமாக மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளதாகவும், மண்ணெண்ணெய் உற்பத்தி தடைப்படுவதால் பொது மக்கள் மேலும் பல பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.