சென்னையில் இன்று முதல் 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை- அமைச்சர் தகவல்

316 0

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் அதை மனதில் கொண்டு சென்னையில் 3 இடங்களில் 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சென்னையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அசோக் நகர் 19-வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு தொற்று உறுதியானது.

இதை அடுத்து அந்த தெருவில் 83 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் அந்த தெருவில் மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் அந்த தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

நுழைவாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த தெருவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்மைக் காலமாக தொடர்ந்தும் கொரனோ பரவல் சற்று அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் கிளஸ்டர் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கே சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக கொரோனா பாதிப்புகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் சென்னையில் 180-க்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் தினசரி 20 முதல் 30 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று கண்டறிய படக்கூடிய பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியாக கிளஸ்டர் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 39,537 தெருக்கள் உள்ள நிலையில் 507 தெருக்களில் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர். இதில் 429 தெருக்களில் 3-க்கும் குறைவான பாதிப்பும், 78 தெருக்களில் 3 பேருக்கும், 42 தெருக்களில் 4 பேருக்கும், 18 தெருக்களில் 5 பேருக்கும் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 4 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் விழிப்போடு செயல்பட்டு அரசு வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றி கொரோனா நோய் பரவலை தடுக்க முன்வரவேண்டும். தயக்கம் கொள்ளாமல் முழுமையாக தடுப்பூசி செலுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

மாநகராட்சி சார்பில் கொரோனா கேர் மையங்கள் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 129 பேராக உள்ளது. அனைவரது மாதிரிகளும் மரபணுப் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, மாநிலங்களில் கொரோனா பரவுவது இரட்டிப்பாகி உள்ளது.

இந்த நிலை உயர்ந்து வருவதுபோல் சென்னையிலும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சென்னையில் 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 194 ஆக அதிகரித்துள்ளது. இது 250-ஐ கடந்து விடும் என தெரிகிறது.

அசோக் நகரில் ஒரே தெருவில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வந்துவிட்டது. அதனால் இந்த பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகிறோம். இங்கு யார்-யார் வீடுகளில் கொரோனா பாதிப்பு என எழுதி கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு வாரம் முன்புவரை 15,000 பேருக்கு கொரோனாவை கண்டறியும் ஆர்.சி.பி.சி.ஆர். பரிசோதனை நடந்தது. நேற்று 23 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று முதல் 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதால் கண்டிப்பாக முககவசம் அணியுங்கள். தடுப்பூசி போடுங்கள். வருகிற ஞாயிற்றுக்கிழமை 17-வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் 1,600 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதால் அதை மனதில் கொண்டு சென்னையில் 3 இடங்களில் 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 300 தற்காலிக படுக்கைகள், மஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கை வசதிகள், ஈஞ்சம்பாக்கம் நகர் நல நல்வாழ்வு மையத்தில் 100 படுக்கைகள் தயார் நிலையில் ஏற்படுத்தி வைத்துள்ளோம்.

கொரோனா 2-ம் அலையின் போது நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தி இருந்தோம். அதை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 நாட்களில் இது பயன்பாட்டுக்கு வர உள்ளது.

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கே சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை முடிவுசெய்துள்ளது.

மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் 3-ந்தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட அவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை போரூரில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதுவரை தமிழகத்தில் 45 நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதம் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் உப்பட வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத சூழல் நீடிக்கிறது. எனவே ஒமைக்ரானால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

தமிழகத்தில் அனைத்து உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.