தமிழகத்தில் 5 கோடி பேருக்கு செலுத்தப்பட்டது முதல் தவணை தடுப்பூசி

198 0

சென்னையில் மணலி மண்டலத்தில் அதிகபட்சமாக முதல் தவணை 151 சதவீதமும், 2-வது தவணை 122 சதவீதமும் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.

இதுவரையில் முதல் தவணை தடுப்பூசி 5 கோடியே 1 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 3 கோடியே 87 லட்சத்து 58 ஆயிரத்து 232 பேர் போட்டுக் கொண்டனர்.

இன்னும் 1.70 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் சுகாதாரத்துறை இந்த பணியை தீவிரப்படுத்தி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது.
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 87 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 59 சதவீதமும் போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல் தவணை தடுப்பூசி 50 லட்சத்து 3 ஆயிரத்து 811 பேருக்கு நேற்று முன்தினம் வரை போடப்பட்டுள்ளது. இது 90 சதவீதம் ஆகும்.

2-வது தவணை 37 லட்சத்து 75 ஆயிரத்து 880 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது 68 சதவீதம் ஆகும். தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களாக 55 லட்சத்து 31 ஆயிரம் பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மணலி மண்டலத்தில் அதிகபட்சமாக முதல் தவணை 151 சதவீதமும், 2-வது தவணை 122 சதவீதமும் போடப்பட்டுள்ளது. மாதவரம் மண்டலத்தில் முதல் தவணை- 110, 2-வது தவணை 88 சதவீதம் பதிவாகி உள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மூலம் முதல் தவணை 6 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேருக்கும், 2-வது தவணை 4 லட்சத்து 95 ஆயிரத்து 236 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.