சேலத்தை சேர்ந்த மேலும் ஒரு முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

199 0

ஒமைக்ரான் தொற்று உறுதியான முதியவர் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ குழுவினர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் மெக்கானிக்காக வேலை பார்த்த சேலம் டவுனை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.

அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டதால் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய சளி மற்றும் ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அவருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் முடிவு நேற்று சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வெளியானது. அதில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் நேற்றிரவு சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ குழுவினர் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண்ணான என்ஜினீயர் ஒருவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சேலத்திற்குள் வரும் அனைவரையும் பரிசோதனை செய்து வீட்டிலேயே தனிமைப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் தற்போது வரை சேலத்திற்கு வந்த 360-க்கும் மேற்பட்டோரையும் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.