போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது

220 0

கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு போடப்பட வேண்டிய 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால்
தாமதம் ஆகியுள்ளது.

இந்நிலையில்,  மாநகர் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் குறித்த 14-வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், நாளை (29.12.2021)  காலை 11.00 மணிக்கு, குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், நிதித்துறை இணைச் செயலாளர் ஜி.கே.அருண் சுயதர் தயாளன், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர், துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட 65 பேரவை தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொள்கிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.