17-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்: இறந்தவர்களுக்கு மீனவ கிராமங்களில் கண்ணீர் அஞ்சலி

217 0

சுனாமி நினைவு தினத்தையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 19 மீனவ கிராமங்களில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் ஓய்வெடுத்தது.

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எனும் ஆழிபேரலை உருவானது.
இந்த பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு எழும்பி கடலோர மீனவ கிராமங்களை சுருட்டியது. இந்த சுனாமி பேரலைக்கு ஆயிரக்கணக்கான பேர் பலியானார்கள்.
இந்த சோக சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சின்னமுதலியார் சாவடி, பெரியமுதலியார் சாவடி, நடுக்குப்பம், தந்தி ராயன்குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்தனர்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து மீனவ கிராமங்களில் இந்த நிகழ்ச்சி அந்த பகுதி மக்களின் இதயங்களில் வடுவாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் சுனாமி பேரலை உருவான தினத்தன்று மீனவர்கள் தங்களது குடும்பத்தில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று சுனாமி பேரலை தாக்கத்தின் 17-வது ஆண்டு நினைவுதினமாகும். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இறந்த மீனவர்களின் உருவப்படங்கள் டிஜிட்டல் பேனரில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த படத்துக்கு அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் கடலில் பால் ஊற்றி பூக்களை தூவி இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டினர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 19 மீனவ கிராமங்களில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் ஓய்வெடுத்தது.