காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளராக, ; சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு காணாமல் போனோர் அலுவலக ஆணையாளராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்கு பாராளுமன்ற சபை அனுமதி அளித்துள்ளது.
சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ;முன்னணி சமூக ஆர்வலராகவும், மனித உரிமைகளின் பாதுகாவலராகவும் பணியாற்றியதை கருத்தில் கொண்டு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்தின் உறுப்பினர்கள் அல்லது ஆணையாளர்களாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வுபெற்ற நீதிபதி தாசிம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தற்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீனும் அவர்களுடன் இணைந்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் கீழும் (திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனங்களுக்கு இணங்கவும் உருவாக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்துக்கு அமைய செயல்பாடுகளை அவ்வலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

