பெரும் போகத்தில் பயிரிடப்பட வேண்டிய மொத்த விவசாய நிலங்களில் 95% விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பெரும் போகத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 70% – 75% வரை நெல் அறுவடை இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போது, உர விநியோகத்தின் போது சில உள்ளூர் உர உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதற்கமைய , உள்ளூர் உர நிறுவனங்கள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்குகிறார்களா என்பது குறித்து டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெரும் போகத்தில் உர உற்பத்தி மற்றும் விநியோகத்தின் போது ஏற்படும் குறைபாடுகளை தவிர்த்து, சிறு போகத்தில் இருந்து திட்டமிட்டபடி இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

