வரட்சியால் திருகோணமலையில் 50 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நாசம்

303 0

dry_land_001_mini-720x4801அதிக வரட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.

இந்த வரட்சி நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளையதினம் விசேட மாவட்ட குழுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரட்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 21 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குச்சவெளி, மூதூர், கோமரங்கடவல, கிண்ணியா, மாருவௌ, கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டம் வரட்சியினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வரட்சி நிலை தொடரும் பட்சத்தில் விவசாயம் நூறுவசதவீதமாக பாதிக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், 30 சதவீதத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல பிரதேசங்களில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

அத்துடன், விவசாய பயிர்ச் செய்கைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.