மதுரை மாவட்டத்தில் 2,150 பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் – ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.

149 0

முன்கூட்டியே பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இருந்தால் இது போன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது என ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

நெல்லையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. முன்கூட்டியே பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இருந்தால் இது போன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது. நாட்டின் வருங்கால தூண்களான மாணவ செல்வங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 2,150 பள்ளிகள் உள்ளன. ஆகவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள வகுப்பறை கட்டிடம், கழிப்பறை, ஆய்வகம், நூலகம், சமையல் கூடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களில் உறுதித் தன்மையை ஆய்வு செய்வது மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் கட்டிடங்களின் உறுதித் தன்மை ஆய்வு செய்து வலுவிழந்து அபாயகரமாக இருக்கும் அனைத்து கட்டிடங்களை போர்கால நடவடிக்கை எடுத்து சீரமைத்து மதுரை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.