மதுரை மாவட்டத்தில் 200 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு – கலெக்டர் அனிஷ்சேகர் நடவடிக்கை

188 0

மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பள்ளியில் ஏற்பட்ட இந்த கட்டிட விபத்து காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த, பயன்பாட்டுக்கு உதவாத கட்டிடங்களை உடனடியாக இடிக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு அதற்கான மேல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். இதில் 120 வகுப்பறை கட்டிடங்கள், 80 கழிவறை கட்டிடங்களும் அடங்கும். மேலும் இந்த கட்டிட பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி கட்டிடங்களை இடித்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள கல்லூரி கட்டிடங்களையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சேதமடைந்த, நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாத கட்டிடப்பகுதிகளை உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.