பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு விரைவு ரெயில்: 15-ந் தேதி முதல் இயக்கம்

266 0

கோவையில் இருந்து தினசரி மதியம் 2 மணிக்கு முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரெயில் (06463) புறப்பட்டு, அதே நாள் மாலை 4.30 மணிக்கு பழனியை அடையும்.

பொள்ளாச்சியில் இருந்து மதுரை வரை அகல ரெயில்பாதை பணிகள் நிறைவடைந்த பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் வருகிற 15-ந் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து புறப்படுவதற்கு பதில் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ரெயில் எண் 16732 திருச்செந்தூர் -பொள்ளாச்சி விரைவு ரெயில் டிசம்பர் 15-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சியை வந்தடையும்.

அதேபோல் வண்டி எண் 16731 பொள்ளாச்சி – திருச்செந்தூர் விரைவு ரெயில் வரும் 16-ந் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இந்த ரெயில்கள் கோமங்கலம், உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து, நெல்லை, பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களில் 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில்களுக்கு வண்டி எண் 06761 பாலக்காடு – பொள்ளாச்சி மற்றும் வண்டி எண் 06762 பொள்ளாச்சி-பாலக்காடு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இணைப்பு ரெயில்களாக செயல்படும். பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.08 மணிக்கு உடுமலையை வந்தடையும். பின்னர் 7.10 மணிக்கு உடுமலையில் இருந்து புறப்பட்டுச் செல்லும். இதேபோல் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.38 மணிக்கு உடுமலையை வந்தடையும். 7.40 மணிக்கு பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுச் செல்லும்.

2 ஆண்டுக்குப் பிறகு கோவில் நகரங்களாகிய பழனி, மதுரை,திருப்பரங்குன்றம் நெல்லை மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களை உள்ளடக்கிய நகரங்களை இணைக்கும் இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த முறை பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்பட்ட ரெயில், பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்டது. இதில் மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டது. தற்போது எக்ஸ்பிரஸ் ரெயிலாக இது மாற்றப்பட்டுள்ளது. எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று பழனி-கோவை இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரெயில் சேவை டிசம்பர் 15-ந் தேதி முதல் தொடங்குகிறது. பழனியில் இருந்து தினசரி காலை 10.35 மணிக்கு முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரெயில் (06462) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.15 மணிக்கு கோவை வந்தடையும்.

கோவையில் இருந்து தினசரி மதியம் 2 மணிக்கு முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரெயில் (06463) புறப்பட்டு, அதே நாள் மாலை 4.30 மணிக்கு பழனியை அடையும். இந்தத்தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.