பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்படும் ஆசிரியர்- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

302 0

மாணவ, மாணவியருக்கு அறச் செயலை கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கத்தை மீறி, அறம் தவறி செயல்படுவது மிகவும் வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆறு மாத காலமாக, அதிகாரிகளை மிரட்டுவது, அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, பெண்களை பேருந்திலிருந்து இறக்கிவிடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது என ஒழுக்கக் கேடுகள் தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டம், கணபதியைச் சேர்ந்த கலாதரன் என்பவரின் இரண்டாவது மகன் மிதுன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு உயிரியல் பாடப் பிரிவில் படித்து வருகிறார்.  மிகச் சிறந்த கால்பந்து வீரரான இவர் கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகி உள்ளார். மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக நீட் தேர்விற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார்.
பள்ளிக்கு சென்ற அந்த மாணவனுடைய சட்டை இறுக்கமாக இருந்ததைக் கண்ட இயற்பியல் ஆசிரியர், அந்த மாணவனை அழைத்து காரணத்தைக் கேட்டதாகவும்,  அந்த மாணவன் விளக்கம் அளித்தும், அந்த ஆசிரியர், மாணவனை சரமாரியாக தாக்கியதாகவும், இதன் காரணமாக அந்த மாணவனின் முதுகு, காது, கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தந்தை அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது.
மாணவ, மாணவியருக்கு  அறச் செயலை கற்றுத் தரவேண்டிய ஆசிரியர்களே ஒழுக்கத்தை மீறி, அறம் தவறி செயல்படுவது மிகவும் வருத்தமளிக்கக்கூடியது. ஆசிரியரே ஒழுங்கீனமாகச் செயல்படுவது, மாணவரை சரமாரியாகத் தாக்குவது  ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.  இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பள்ளிகளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், தக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு தமது அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.