யேர்மன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுப் 10 வாரங்களின் புதிய அரசு பதவியேற்பு! மா.பாஸ்கரன்

389 0

யேர்மனியின் 20ஆவது நாடாளுமன்றிற்கான(Bundestag) தேர்தல் 26.09.2021இல் நடைபெற்றபோதும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையற்ற நிலையிற் பல்வேறு சுற்றுகளிற் பல்வேறு கூட்டுகளுக்கான பேச்சுகள் நடைபெற்றபோதும் இறுதியில் சமூக சனநாயகக் கட்சி (206)SPD பசுமைக்கட்சி(118)Grüne சுதந்திர சனநாயகக்கட்சி(92)FDPஆகியன ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறுதியாக 416 இருக்கைகளோடு ஆட்சியை அமைத்துள்ள அதேவேளை இ320இருக்கைகளோடு எதிர்க்கட்சிகளாக கிறித்தவ சனநாயக மற்றும் கிறித்தவ குமுகாயச் சங்கங்களின் கூட்டு(197)Union, யேர்மனிக்கான மாற்று(82)AfD, வலதுசாரக்கட்சி(39) Linke, சுயேட்சை (2) ஏனையவை(2) என இடம்பெற்றுள்ளன.

நேற்று (08.12.2021) நடைபெற்ற நாடளுமன்றின் ஆட்சித்தலைவருக்கான(Kanzeler) வாக்கெடுப்பில் 369வாக்குகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறைமுக வாக்கெடுப்பிற் 395 வாக்குகள் ஆதரவாகவும் 303வாக்குள் எதிராகவும் வாக்களிக்கப்பட்டதை அடுத்து ஒலாவ் சொள்ஸ்(Olaf Scholz) அவர்கள் 20ஆவது நாடாளுமன்றின் ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கான நியமனச் சான்றிதழை அரசுத்தலைவரான(BundesPräsident) கலாநிதி பிராங் வால்டர் ஸ்ரைன்மையர் அவர்களால் வழங்கப்பட்ட அதேவேளை அமைச்சர்களுக்கான நியமனச் சான்றிதழ்களும் வழங்கப்படதைத் தொடர்ந்து, நாடாளுமன்றிலே சபாநாயகரின் முன்னிலையில் உறுதியுரையேற்பைத் தொடர்ந்து முறைப்படி ஆட்சித்தலைவரானார். அதேவேளை, 15 அமைச்சர்களின் உறுதியுரையேற்பையடுத்து புதிய அரசு யேர்மனியின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது.

16ஆண்டுகள் ஒரு நிலையான ஆட்சியோடு ஐரோப்பாவின் சிங்கப் பெண்ணெனச் சுட்டப்படும் அங்கெலா மேர்கல் அம்மையாரவர்களின் ஆட்சியும் நிறைவுக்கு வந்துள்ளதோடு, புதிய அரசுக்கான உடனடிச் சவாலாக கொறோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளல், பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருண்மிய நெருக்கடியென உள்ளகரீதியாகவும், ஐரோப்பிய எல்லைகளிலே உள்ள ஏதிலிகளைக் கையாளல், ரஸ்யா – உக்ரேன் பதற்றநிலை, ரஸ்யாவுடனான எரிவாயு ஒப்பத்தம், என வெளியகரீதியாவும் உள்ள நிலைமையை எப்படிச் சமாளித்து வெற்றிகொள்ளப்போகிறதென்பது பெரும் வினாவாகத் தொக்கி நிற்பதையும் நாம் மறுக்க முடியாதெனலாம். அடுத்துவரும் நான்கு ஆண்டுகள் யேர்மனுக்குத் தலைமைதாங்குவது மட்டுமன்றி யேர்மனியின் தலைவிதியைத் தீர்மானிப்பதோடு நிலையானதொரு ஆட்சியைத் தருவதோடு, தொற்று- நோய்த்தடுப்பு மற்றும் பொருண்மிய முன்னேற்றம் என்பன சீராகுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

புதிய அரசினது கட்சிகள் ஏற்றுள்ள அமைச்சுகளாவன,ஆட்சித் தலைவரான ஒலாவ் சொள்ஸ் அவர்களின் சமூக சனநாயகக் கட்சியின் வொல்வ்காங் ஸ்மிற் ஆட்சித் தலைவரது செயலகத்தின் செயலராகவும், வீட்டுவசதி மற்றும் கட்டிடத்துறை – கிளாரா கெய்விட்ஸ், தொழில் மற்றும் குமூகாய விவகாரம் – கூபற்ருஸ் கையில், பாதுகாப்பு – கிறிஸ்ரியன் லம்றெக்ற், மருத்துவம் – கார்ல் லௌற்றபாக், உள்ளகவிவகாரம் – நான்சி ஃபேசர், அபிவிருத்தி – ஸ்வென்யா சூள்ஸ் ஆகிய அமைச்சுகளையும், சுதந்திர சனநாயகக் கட்சி நிதி – கிறிஸ்ரியன் லிண்ட்னர், நீதி – மார்க்கோ புஸ்மன், போக்குவரத்து மற்றும் எண்மின்(Digitales) – வோல்கர் விஸ்ஸிங், கல்வி – பெர்ரினா ஸ்ராக் வாற்ஸிங்கெர் ஆகிய அமைச்சுகளையும், பசுமைக் கட்சி குடும்பநலன் மற்றும் மகளிர் விவகாரம் – அனெ ஸ்பீகெல் , வெளியுறவு – அனலீனா பேர்பொக், பொருண்மியம் மற்றும் காலநிலைப்பாதுகாப்பு – றொபேட் ஹபக், விவசாய வேளாண்மை – செம் ஒயிஸ்டெமிர், சூழலியல் – ஸ்ரெபி லெம்கெ ஆகிய அமைச்சுகளையும் கொண்டதோர் முக்கூட்டுக்கட்சிகளின் அரசாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி.