சென்னையில் மீண்டும் முக கவசம்- கிருமி நாசினி விற்பனை அதிகரிப்பு

241 0

தமிழகத்தில் அடுத்த 3 மாதத்துக்கு தேவையான அனைத்து வகையான மருந்துகள், முக கவசங்கள், கிருமி நாசினிகள், ஆக்சிஜன் கருவிகள், ஆய்வு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை தொட்டது. அப்போது உயிர் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் கருவிகள், கிருமி நாசினிகள், முக கவசங்களின் தேவை அதிகரித்தது.

திடீரென கொரோனா உச்சத்துக்கு சென்றதால் இந்த உயிர்காக்கும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் அதன் விலை கடுமையாக உயர தொடங்கியது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அதன் தட்டுபாடு நீங்கியது. உயிர்காக்கும் பொருட்களுக்கு விலையை அரசே நிர்ணயித்தது. இதையடுத்து ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

தற்போது சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள்ளேயே உள்ளது. இதன் காரணமாக உயிர்காக்கும் பொருட்களின் தேவையும் குறைந்தது. அதன் விற்பனையும் சரிந்தது.

இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவியது.

இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரசால் 20-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் வழக்கமான கொரோனா தொற்றை விட வேகமாக பரவக்கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மருந்து கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட உயிர்காக்கும் பொருட்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் வழக்கத்தை விட 50 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக மருந்து கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முக கவசங்கள், கிருமி நாசினிகளை தனியார் நிறுவனங்களும், தன்னார்வல சுகாதார அமைப்புகளும் அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன.

பொதுமக்களும் முக கவசங்களை அதிகமாக வாங்கி செல்வதாக மருந்து கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் அடுத்த 3 மாதத்துக்கு தேவையான அனைத்து வகையான மருந்துகள், முக கவசங்கள், கிருமி நாசினிகள், ஆக்சிஜன் கருவிகள், ஆய்வு உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

முக கவசம் விற்பனையாளரிடம் இதுகுறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வந்த சூழ் நிலையில் அரசு கடுமையான ஊரடங்கு பிறப்பித்து, முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொரோனா 2-வது அலைக்கு பின்னர் பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் முக கவசங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். எங்களிடம் ரூ.5முதல் முககவசம் கிடைக்கின்றன.

அதையே பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். அரசு முக கவசம் அணிவது குறித்து உடனடியாக தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.