பாகிஸ்தானில் பிரியந்தவை போன்று என்னை கொன்றுவிடுவார்கள் என்றே பயந்தேன்’’ – என மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார்.
“பாராளுமன்றத்தில் அச்சமின்றி உண்மைகளை துணிச்சலுடன் வெளிப்படுத்திய போது, ஆளும்கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து என்னைத் தாக்க முயற்சித்து அச்சுறுத்திய போது பாகிஸ்தானில் காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவே நினைவிற்கு வந்தார்.
பாராளுமன்றத்தில் மிகவும் ஆவேசத்துடன் அச்சுறுத்தல் விடுத்து வன்முறையில் ஈடுபட்ட ஆளும்கட்சி குண்டர்கள் பார்த்தபோது, அவர்கள் என்னை பாராளுமன்றத்திற்கு உள்ளோ அல்லது வெளியிலோ கொலை செய்துவிட்டு, ஜனநாயக வெளியில் அரசாங்கத்திற்கு எதிரான எனது குரலை அடக்க முயல்வார்கள் என்று கவலையடைந்தேன். பிள்ளைகள் உள்ள தந்தை என்ற முறையில், ஜனநாயகத்தின் மரபுகளை நாம் எதிர்கால சந்ததியினருக்குப் பெற்றுத் தருவோமா அல்லது மிருகத்தனமான ஆட்சியின் உதாரணங்களைச் கொண்டு சேர்ப்போமா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
எனது பன்னிரெண்டு வருட பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்றில் இவ்வாறான கொடூர வன்முறைக்கு முகங்கொடுத்தது இதுவே முதல் தடவையாகும். பாராளுமன்ற ஜனநாயகத்தை அழித்த ஐம்பத்தி இரண்டு நாள் ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் போது நடந்துகொண்டதை விட மிகக் கொடூரமாக நடந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் போது எமது உயிருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட முடியாது.”

