இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்- முத்து சிவலிங்கம் (காணொளி)

382 0

muththuஇந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழும் நிலையில், யார் எதைச் சொன்னாலும் தமது கலை, கலாசாரத்தை ஒழித்து விட முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மத்திய மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் முத்து சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம்,

இந்தியாவில் தொன்று தொட்டு நிகழ்த்தி வந்த ஜல்லிக்கட்டு காளை அடக்கும் நிகழ்விற்கு எதிர்ப்புக் காட்டியமையினால் மாட்டுப்பொங்கல் தினமான இன்று 8 கோடி தமிழ் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் பங்கு வகிக்க கூடிய நாம் இலங்கை மற்றும் மலைநாட்டிலும் இந்திய வம்சாவளியினராகத் திகழ்கின்றோம். இவ்வாறாக இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்.

உழைப்புக்கும் அதன் உயர்வுக்கும் வித்திட்ட மலையக தோட்ட தொழிலாளர்கள் தைத் திருநாளை கொண்டாடுகின்ற இந்நாளில் தோட்டங்கள் என்ற வார்த்தையை அகற்றி கிராமங்களில் வாழும் மக்கள் என தனி வீடுகளை அமைத்து வாழ வேண்டும்.

இதை ஒற்றுமையாக நாம் முன்னெடுக்க வேண்டும். இதுவே ஆரம்பகாலத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடாக அமைந்திருந்தது. நூற்றுக்கு 90 வீத தமிழ் மக்கள் வாழும் தலவாக்கலை பிரதேசத்தில் இவ்வாறான கலாசார நிகழ்வுகளை கொண்டாடுவது பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

கலைகள், கலாசாரங்கள் காலத்திற்கேற்ப ஒழிந்தும், மறைந்தும் வருகின்ற சூழ்நிலையில், அதனை மறக்கவிடாது எதிர்கால சந்ததியினருக்குச் சென்றடையும் வகையிலும், கலாசாரங்களை அதன் விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் காலத்திற்கேற்ப அதன் பணிகளை செய்து வருகின்றது– என்றும் குறிப்பிட்டார்.