தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுகிறது!

267 0

mubarak-moulaviமஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருட காலமாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல், இழுத்தடித்து வருகின்றது என உலமாக் கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று(14) கல்முனையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மைத்திரி ஆட்சிக்கு வந்தால், சிங்க‌ள‌ இன‌வாத‌ம் ஒழிக்க‌ப்ப‌ட்டு, தாம் நிம்மதியாக வாழ முடியும் என‌ க‌ற்ப‌னை செய்த‌ சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ள் இன்று த‌லையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும் அள‌வுக்கு மைத்திர் அர‌சு இன‌வாதிக‌ளை ம‌டியில் வைத்து ஊட்டி வ‌ள‌ர்க்கிற‌து.

அது மாத்திரமல்லாமல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வ‌ந்தால் த‌ம‌து வ‌ர்த்த‌க‌த்துக்கு ந‌ல்ல‌தாக அமையும் என‌ எதிர்பார்த்த‌ கொழும்பு முஸ்லிம் வர்த்தகர்களும் நாட்டின் ஏனைய ந‌க‌ர‌, பிர‌தேச‌ முஸ்லிம்க‌ளும் த‌ம‌து வ‌ர்த்த‌க‌ங்க‌ளை இழ‌ந்து ந‌டுத்தெருவில் நிற்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் ஜனாதிபதி மைத்திரியினதும், பிரதமர் ரணிலினதும் கட்சிகள் தோல்வியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

குறிப்பாக அடுத்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ போட்டியிட‌ முடியாத நிலையில், அவ‌ரின் ஆத‌ர‌வுட‌ன் கோட்டாப‌ய‌ அல்ல‌து பசில் ராஜ‌ப‌க்ஷ‌ போட்டியிடும் ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளுக்கான‌ வெற்றி வாய்ப்பே அதிக‌ம் உள்ள‌து.

ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ போட்டியிட்டால் ப‌டுதோல்வி அடைவார் என்ப‌து உறுதியாகியுள்ள‌து. க‌ட‌ந்த‌ பொதுத் தேர்த‌லில் ஐ.தே.க‌.வுக்கு வாக்க‌ளித்த‌ ம‌க்க‌ள் கூட‌ ர‌ணில் பிர‌த‌ம‌ரான‌ இந்த‌ ஆட்சியில் வெறுத்துப்போயுள்ள‌ன‌ர்.

அதேவேளை ஒரு த‌ட‌வை ம‌ட்டுமே ஜ‌னாதிப‌தியாக‌ இருப்பேன் என‌க்கூறிய‌ மைத்திரி, தேர்த‌லில் போட்டியிடுவ‌து த‌ன‌து வாக்கை தானே மீறிய‌வ‌ர் என்ற‌ வ‌ர‌லாற்று பெய‌ரை அவ‌ருக்கு ஏற்ப‌டுத்தும் என்ப‌தால் அவ‌ர் போட்டியிட‌ மாட்டார்.

முஸ்லிம் ச‌மூக‌ம் எவ்வாறு ஜ‌னாதிப‌தி தேர்த‌லை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என்பது ப‌ற்றி நிதான‌மாக‌ சிந்திக்க‌ முன்வர வேண்டும் என்ப‌தையே எமது உல‌மா க‌ட்சி வ‌லியுறுத்துகிற‌து” என மேலும் தெரிவித்தார்,