ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும்- ஓ.பன்னீர்செல்வம்

319 0

201701151438246868_Paneer-Selvam-Speech-Jayalalithaa-government-way-traveling_SECVPFதமிழக அரசு விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேரறிஞர்கள் பெயரில் தமிழக அரசு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று திருவள்ளுவர் விருதை- புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருதினை பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருதை மருத்துவர் துரை சாமிக்கும் வழங்கினார்.

இதே போல் பேரறிஞர் அண்ணா விருது- கவிஞர் கூரம் துரைக்கும், பெருந் தலைவர் காமராஜர் விருது- நீலகண்டனுக்கும், மகாகவி பாரதியார் விருது- பேராசிரியர் முனைவர் கணபதி ராமனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதி தழிழ் தென்றலுக்கும் திரு.வி.க விருது- பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும், முத்தமிழ் காவலர் இ.ஆ.பெ. விசுவநாதம் விருது- மீனாட்சி முருகரத்தினத்துக்கும் வழங்கப்பட்டது.

இவர்கள் ஒவ்வொரு வருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 1 பவுன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றையும் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.

விழாவில் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

திருவள்ளுவரின் அறநெறிக்கு ஏற்ப, அனைவருக்கும் விலையில்லா அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற மளிகை பொருட்கள், ஏழைகள் வயிறார உண்ண அம்மா உணவகங்கள், குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள், அம்மா மருந்தகங்கள் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் பேணுநர் இல்லா தோருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம், ஏழை பெண்களுக்கு 50,000 ரூபாய் வரை திருமண நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தாலிக்கு தங்கம், ஏழைத் தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி, கிராமப் புற ஏழை மக்களுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் செம்மறியாடுகள், அம்மா குடிநீர், முதியோர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, என பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி ஈகையின் பிறப்பிடமாகத் திகழ்ந்தவர் அம்மா அவர்கள்.

பாரதியார். காட்டிய வழியில் அம்மா அவர்கள், ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு கட்டணமில்லாக் கல்வி, ஊக்கத் தொகை, விலையில்லா புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, காலணி, கணித உபகரணப்பெட்டி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்து வசதி ஆகியவற்றை வழங்கி அனைவரும் கல்வி கற்க வழிவகை செய்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பல்நோக்கு மருத்துவமனை வரை சிறப்பான மருத்துவ வசதிகளை உருவாக்கியதுடன், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற வழிவகுத்தவர் அம்மா அவர்கள்.

தமிழர்களின் பாரம் பரியத்தையும், கலை மற்றும் கலாச்சாரத்தையும் பேணிக் காப்பதில் அம்மா அவர்களுக்கு நிகர் வேறு யாருமில்லை. தமிழக வரலாற்றில் எவரும் செய்யாத ஏற்றமிகு சாதனையை படைத்தவர் அம்மா அவர்கள்.

அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவர் பெயரில் விருதை அறிமுகப்படுத்தியவர் அம்மா அவர்கள். திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை இயற்ற வழிவகை செய்தவர் அம்மா அவர்கள். திருவள்ளுவர் பெயரில் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் அம்மா அவர்கள். தமிழ்த் தாய் விருதை தோற்றுவித்தவர்

அம்மா அவர்கள். கபிலர், கம்பர், உ.வே.சா., ஜி.யு.போப், உமறுப் புலவர், இளங்கோவடிகள் ஆகியோர் பெயர்களில் விருதுகள், சொல்லின் செல்வர் விருது எனப் பல புதிய விருதுகளை அறிமுகப்படுத்தி தமிழறிஞர்களை கெளரவப்படுத்தியவர் அம்மா அவர்கள்.

திருக்குறளை சீனம், அரபு மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்க்க வழிவகுத்தவரும், அம்மா எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக் காட்டியவரும் அம்மா அவர்கள். தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இன்னும் சொல்லப் போனால், கன்னியா குமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவவித்திட்டதே அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

இது போன்ற விழாக்கள் மக்களிடையே, குறிப்பாக, இளைய சமுதாயத்தினரிடையே, தமிழ் மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற ஒரு அவாவினை ஏற்படுத்துவதோடு, நாமும் தமிழ் அறிஞராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் அவர்களின் மனங்களில் நிச்சயம் ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல், எல்லோரும் ஓர் நிறை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், சமுதாயத் தலைவர்களும் நல்ல பல கருத்துகளை தமிழ் மக்களிடையே பரப்பி, தமிழ் மொழி வளர்ச்சியடையவும், மேன்மை பெறவும், தமிழ் மாநிலம் முதன்மை மாநில மாகத் திகழவும் வழிவகுக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

விருது பெற்றவர்கள் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை உரை நிகழ்த்த அமைச்சர்கள் பென்ஜமின், கடம்பூர் ராஜீ. ஜெயக்குமார் பேசினார்கள். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்வளர்ச்சி செய்திதுறை செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.