எதிர்வரும் 22 இல் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் கலந்துகொள்வார்!

238 0

11778எதிர்வரும் 21ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வாரென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வுகள் எதிர்வரும் 21ஆம் நாள் காலை கல்லடி மற்றும் ஊறணி ஆகிய இடங்களில் இருந்து வரும் பேரணியுடன் ஆரம்பமாகி பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்வுடன் நிறைவடையும்.

தைப்பொங்கல் திருநாளான இன்று மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலமைந்துள்ள கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,இன்றைய தினம் இன்றைய தினத்திலே மட்டக்களப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்  சதாசிவம் வியாளேந்திரன்  ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்திருப்பதானது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.

தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்கள் உள்ளடங்களாக தொண்டர்களும் மற்றும் தனி நபர்களும்  மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கான அணிதிரட்டலை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

2015 ஐ.நா. இன் மனித உரிமைகள் பேரவை இலங்கை நாட்டின் சம்மதத்தோடு இனங்களுக்கிடையே நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் குறிப்பிட்ட காலத்தினுள் முன்னேற்றங்களைக் காட்டுதல் வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இத்தீர்மானத்தில் உள்ள விடயங்களில் மிகச் சிறிதளவே இது வரையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. மிக அதிகளவான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாமலும் நிறைவேற்ற முயற்சிக்கப்படாமலும்  இருப்பது மக்களையும் சிவில் அமைப்புக்களையும் ஏமாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது.

வருகின்ற பங்குனி மாதம் ஐ.நா. இன் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத் தொடர்  கூடி இலங்கையினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவிருக்கின்றது.அக்கலந்துரையாடலின் போது இலங்கை மேலும் கால அவகாசம் கோரலாம், அல்லது சக்தி வாய்ந்த நாடுகளின் துணையோடு மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நீர்த்துப் போக செய்ய முயலலாம் என்ற ஓரு சந்தேகம்; மக்களிடையே ஏற்பட்டுள்ளது

இத்தகைய தருணத்தில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை துரிதப்படுத்துமாறு அரசையும் சர்வதேசத்தையும் கேட்பதோடு சிறுபான்மை இனங்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நாட்டுக்கும் உலகத்துக்கும் அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் ஏற்கனவே கடந்த புரட்டாதி 24 அன்றைய ‘எழுக தமிழ்’  நிகழ்வினூடாக  தங்கள் அரசியல் அபிலாசைகளை நாட்டுக்கும் உலகத்துக்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார்கள்.தமிழ் மக்கள் பேரவை கிழக்கு மக்களுக்கான சந்தர்ப்பத்தை எதிர் வரும் தை 21 இல் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது.எனவே அன்றைய நாளை ஒரு முக்கிய நாளாகக் கருதுமாறு தமிழ் மக்கள் பேரவவை கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது

அன்றைய நாளில் தனியார் நிறுனங்கள், வர்த்தக நிலையங்கள், கல்விச் சாலைகள் அனைத்தையும் மூடி இந்நிழ்வில் பங்கு பெறுமாறும்,உயர் கல்வி றிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், மாணவர் சங்கங்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும்,

முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தனியார் வாகனச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது வண்டிகளோடு ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்து கொள்ளுமாறும்,விளையாட்டுக் கழகங்கள்,  இழைஞர் கழகங்கள், சமூதாய மட்ட அமைப்புக்கள், விவசாய சங்கங்கள், மீன்பிடிச் சங்கங்கள், கமநல அமைப்புக்கள், ஆலய பரிபாலன சபைகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய ஸ்தாபனங்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர் சம்மேளனங்கள் முதலான சகல அமைப்புக்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்கின் ‘எழுக தமிழ்’ ஏற்பாட்டுக்குழு இவ்வூடக அறிக்கையினூடாக அழைப்பு விடுகின்றது.

அதே நேரம் இவ்வமைப்புக்கள் எழுக தமிழுக்கான ஆதரவினைத் தெரிவித்து ஊடக அறிக்கைகளை விடுக்குமாறும் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சகல அமைப்புக்களையும் கோருகின்றது.அன்றைய பேரணியில் கலந்து கொள்ளும் மக்களின் தாகசாந்திக்கு தண்ணீர்ப் போத்தல்களையும் குடிபானங்களையும்  வழங்கி உதவுமாறு விருப்புள்ளோரையும் வசதி உள்ளோரையும்  ஏற்பாட்டுக்குழு கோருகின்றது

மேலும் கிழக்கிலே மக்களுக்காக அவர்களின் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுக்க பணியாற்றிக்  கொண்டிருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களினால் தமிழ் மக்கள் பேரவையினூடாக நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்கும் தங்களது ஜனனாயக ரீதியிலான கோரிக்கைகளுக்கு பலம் சேர்க்குமாறு எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு விஷேட அழைப்பு விடுக்கின்றது என்று எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பாகத் தெரிவித்தார்.