விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனையில் 7 பேர் கைது

25 0

காவற்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக ஐந்து மதுபானச் சுற்றிவளைப்புகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34.5 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 542 லீற்றர் கோடா, ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு செப்புத் தகடுகள், இரண்டு இரும்பு பீப்பாய்கள் என்பவற்றையும் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தீர்வை வரியின்றி இந்த நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 03 ஐச் சேர்ந்த 27 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, வாழைத்தோட்டம் காவற்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் புகைத்தல் பொருட்களுடன் 30 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தையைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்தை காவற்துறை பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தைப்  பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.