அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு

130 0

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு.

தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி (வருகிற (2022-ம் ஆண்டு) செப்டம்பர் 15-ந்தேதி) நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வைத்து முன்னதாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையடுத்து சென்னை புழல் சிறைச்சாலை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் 700 பேரை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எந்தெந்த சிறைகளில் யார்-யார் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை சிறைத்துறை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.
ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறை கைதிகள் நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதியையொட்டி 700 சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.