ஈராக்: மோசூல் நகரை கடந்து நினேவே மாகாணத்துக்குள் அரசுப் படைகள் நுழைந்தன

257 0

201701141108583901_Iraqi-forces-reach-Nineveh-government-HQ-in-Mosul_SECVPFஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள மோசூல் நகரை கைப்பற்றியதுடன் அருகாமையில் உள்ள நினேவே மாகாணத்துக்குள் அரசுப் படைகள் நுழைந்துள்ளன.

ஈராக் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.

இந்நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தபடி தங்களது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசூல் நகரை தீவிரவாதிகளின் தலைமையிடமாக மாற்றியுள்ள இவர்கள் இங்கிருந்தவாறு உலகம் முழுவதும் அப்பாவி மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களை ஒழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் துணையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள இந்நகரை தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை மோசூல் நகரைவிட்டு வெளியேற விடாமல் மிரட்டி, தடுத்து வைத்துள்ளனர். அரசுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகித்து பலரை கொன்றும் குவித்துள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாக மோசூலை கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையினரின் துணையுடன் ஈராக் ராணுவம் உச்சகட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக மோசூல் நகரின் பெரும்பான்மையான பகுதிகள் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க மோசூல் பல்கலைக்கழகத்தையும் அரசுப் படைகள் கைப்பற்றின. அந்தப் பகுதியையும் கடந்து முன்னேறிச் சென்ற ராணுவ வீரர்கள் நேற்று மாலை அருகாமையில் உள்ள நினேவே மாகாண கவர்னர் மாளிகையை கைப்பற்றினர்.

அந்த கட்டிடத்தின்மீது பறந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி அகற்றப்பட்டு, அங்கு ஈராக் நாட்டு தேசியக்கொடி பறக்கும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

தொடர்ந்து டைக்ரிஸ் நதியின் கிழக்கில் உள்ள இதர பகுதிகளை நோக்கி முன்னேற அரசுப்படைகள் திட்டமிட்டுள்ளதாகவும் ஈராக்-அமெரிக்கா கூட்டு தீவிரவாத ஒழிப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.