சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

208 0

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதார உர நிறுவனம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுசந்த பாலபடபெந்தி, பில்லியன் ரூபாயை விட அதிக மதிப்புள்ள இயற்கை உரங்களை வாங்குவதற்கான டெண்டரைப் பெற்ற பிரதிவாதியான “குவின்டாம்ப சிவின் பயோடேக் காப் கம்பனி” என்ற சீன நிறுவனம் குறித்த டெண்டரை செயற்படுத்தி உர தொகையை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக முன்னதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம், கிருமி நீக்கம் செய்யப்பட்ட சேதன உரத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தேவையிருந்த போதிலும், குறித்த நிறுவனம் கப்பலின் அறிவுறுத்தல் துண்டுப்பிரசுரத்தில் சேதன உரத்தில் நுண்ணுயிரிகள் இருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதிவாதியான சீன நிறுவனத்தால் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு அனுப்பிய உர மாதிரியை பரிசோதித்ததில், சில உர பாகங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் இருப்பது தெரியவந்ததாக கூறிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த நிலையில், டெண்டரில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளை சீன நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.