மதுரை வைகை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

269 0

மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு வந்த வெள்ளம் தரை பாலங்களை மூழ்கி பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கண்மாய்கள், குளங்கள் 85 சதவீதம் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. முல்லைப் பெரியாறு, வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து 4,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு வந்த வெள்ளம் தரை பாலங்களை மூழ்கி பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் வைகை ஆற்றில் சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் வேகத்துடன் செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை இறக்கவோ கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வைகை ஆற்றுக்குள் செல்லும் பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வைகையில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பொதுமக்கள் மேம்பாலங்களில் நின்று ரசித்தனர். தரைப்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மேம்பாலங்களில் அதிகமான வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிம்மக்கல், யானைக்கல், கோரிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.