கிளிநொச்சியில் டெங்கு நோய் வேகமாகப் பரவிவருகின்றது- சுகாதார பிரிவு(காணொளி)

267 0

kili denguகிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 1ஆம் திகதியில் இருந்து 13ஆம் திகதி வரை சுமார் 28 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர், கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருடன் இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன சிரமதான பணிகளை மேற்கொண்டு வருவதுடன், சிவில் பாதுகாப்பு திணைக்கள நாடகக் குழுவினரால், டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு  நாடகங்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும், உயிர்கொல்லி டெங்கு நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்திலுள்ள கர்ப்பவதிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.